×

ரூ.1200 கோடியில் அதிநவீன வசதியுடன் திருச்சி விமான நிலைய புதிய முனையம்: l 93 சதவீத பணிகள் நிறைவு l 2024 ஜனவரியில் திறக்க திட்டம்


இரண்டாம் உலக போரின் போது பிரிட்டிஷ் அரசு தங்களின் போர் விமானங்களை பழுது பார்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் 1942ம் ஆண்டு திருச்சி காஜாமலையில் ஒரு விமான தளத்தை உருவாக்கியது. இங்கு தரையிறங்கும் போர் விமானங்கள், அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள பொன்மலையில் அமைக்கப்பட்டிருந்த பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. 1944ம் ஆண்டுக்கு பின் விமானநிலையம் ஸ்டேஜிங் போஸ்ட் மற்றும் பணியாளர் போக்குவரத்து மையமாக செயல்பட தொடங்கியது. அதன்பின் 1947ல் இலங்கை அரசு, கொழும்பு- திருச்சி இடையே விமானங்களை இயக்க அனுமதி கேட்டது. இதனால் இந்திய அரசு விமான நிலையத்தை முழுமையாக செயல்படும் வகையில் மேம்படுத்தியது. இதையடுத்து 1948ம் ஆண்டு இங்கிருந்து கொழும்புக்கு விமான செயல்பாடுகளை அனுமதித்தது. இதன்பின் திருச்சி- கொழும்பு மற்றும் மும்பை வழியாக கராச்சிக்கும் விமான சேவைகள் தொடங்கியது.

1950க்கு பிறகு பல்வேறு கால கட்டங்களில் திருச்சி, சென்னை, மதுரை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம் வழித்தடங்களில் இந்தியன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு சேவைகளை தொடங்கியது. 1990ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் திருச்சியை, குவைத் மற்றும் ஷார்ஜா போன்ற மத்திய கிழக்கு நகரங்களுடன் இணைக்க தொடங்கியது. 2000ம் ஆண்டு முதல் திருச்சி விமான நிலையத்தில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு விமான நிறுவனங்களும் விமான சேவைகளை வழங்க தொடங்கின. அதேநேரம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சியை, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைக்க தொடங்கியது.

இந்நிலையில் 2009ம் ஆண்டு நவீன ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் கட்டப்பட்டபோது, ​​கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் தொழில்நுட்ப தொகுதியை உள்ளடக்கிய சர்வதேச சரக்கு வளாகமாக மாற்றப்பட்டது. இது தற்போது சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் ரூ.80 கோடி செலவில் அமைக்கப்பட்டது. மொத்தம் 702 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. இதில் இரண்டடுக்கு முனையம் 1,26,770 அடி பரப்பளவில் அமைந்துள்ளது. அதில் 8,136 அடி நீளமுள்ள ஓடுபாதை அமைக்கப்பட்டு 2009 பிப்.21 ம் தேதி திறக்கப்பட்டு, ஜூன் 1ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது.

தற்போது செயல்பாட்டில் உள்ள இந்த பயணிகள் முனையம் 12 செக்-இன் கவுன்ட்டர்கள், திருச்சியில் இருந்து புறப்படும் பயணிகளை கையாள 4 கவுன்ட்டர்கள், வௌிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கையாள 16 கவுன்ட்டர்கள், பயணிகளின் உடைமைகளை வௌியே கொண்டுவர 154 அடி நீள 3 கன்வேயர் பெல்ட்கள், 1 பேக்கேஜ் உதவி கவுன்ட்டர், 1 சுகாதார அதிகாரி கவுன்ட்டர், பயணிகளின் உடைமைகளை சோதனையிட 5 எக்ஸ்ரே ஸ்கேனர்கள், அதிகாரிகள் பயணிகளை பாதுகாப்பு சோதனை செய்ய 4 அலகுகள் இயங்குகின்றன. திருச்சியில் இருந்து தற்போதுவரை மொத்தம் 6 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமானத்தில் இருந்து பயணிகள் வௌியே வர 3 ஏரோ பிரிட்ஜ்கள், 300 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடம், இரண்டு ஓய்வறைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. தற்போது அதிநவீன வசதிகளுடன் புதிய முனையம் கட்டப்பட்டு வருகிறது.

புதிய முனையம் குறித்து விமான நிலைய பொறியாளரும், பொது மேலாளருமான செல்வகுமார் கூறியதாவது: தென் இந்தியாவில் தற்போது மொத்தம் 23 விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. ஒன்றிய அரசு விமான நிலையங்களை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுக்கு ரூ.5ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதி மூலம் சிறிய விமான நிலையங்களை தரம் உயர்த்தவும், நவீனப்படுத்தவும், பயணிகளுக்கான சேவையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக பொறியாளர்களை கொண்டு இந்த விமான நிலையங்களை மேம்படுத்தும் பணியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது. இதில் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டது திருச்சி விமான நிலையத்திற்குத்தான்.

தற்போது கட்டப்பட்டு வரும் புதிய முனையம் ரூ.1200 கோடி செலவில் கடந்த 2019ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. இடையே கொரோனா தாக்கத்தால் பணிகள் முடங்கின. இருப்பினும் அப்போதிருந்த தொழிலாளர்களை கொண்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த புதிய முனையம் மொத்தம் 134 ஏக்கரில் 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. இதில் 4 நுழைவாயில்கள், 12வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பயணிகள் வௌியேற 4 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 60 செக் இன் கவுன்ட்டர்கள் கட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய 3 எக்ஸ்ரே இயந்திரங்கள், வௌிநாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனையிட 4 எக்ஸ்ரே இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் உடைமைகளை விமானத்தில் இருந்து கொண்டு வரவும், விமானத்திற்கு கொண்டு செல்லவும் 6 கன்வேயர் பெல்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் குடியேற்ற சோதனைக்கு 58 கவுன்ட்டர்கள் கட்டப்பட்டுள்ளது. பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி நேரடியாக விமான நிலையத்திற்குள் வருவதற்கு 10 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள்ளேயே பேருந்துகளில் அழைத்து வருவதற்காக 2 வழித்தடங்கள் உள்ளது. தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் உள்நாட்டு பயணிகள் 1,500 பேரையும், வௌிநாட்டு பயணிகள் 4,000 பேரையும் கையாள முடியும். 750 கார்கள் நிற்கும் வகையில் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நவீன முறையில் விமானங்களை அதன் குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்துவதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய முனையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 345 ஏக்கரில் 305.03 ஏக்கர் பட்டா நிலமாகும். 40.59 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம். இதில் பட்டா நிலத்தில் 294.58 ஏக்கருக்கு உரிய தொகை வழங்கப்பட்டு விட்டது. ஏற்கனவே உள்ள முனையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், தோஹா, கொழும்பு, கோலாலம்பூர் போன்ற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நாடுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்ரீலங்கன், மலிண்டோ, ஏர் ஏசியா, ஸ்கூட் போன்ற விமானங்கள் சேவை வழங்கி வருகின்றன. இவைகளை தாண்டி புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்தபின் புதிய விமான நிறுவனங்கள் சேவையை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதுவரை இங்கு குறைவான அளவுள்ள பயணிகளை கொண்ட விமானங்கள்தான் இயக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் போயிங் போன்ற 200க்கும் அதிகமான பயணிகளுடன் அதிக நீளம், அகலமுள்ள விமானங்கள் திருச்சிக்கு வருகை தரும். இந்த புதிய முனையத்தில் ரூ.56 கோடி செலவில் நவீன விமான கட்டுப்பாட்டு அறை கட்டப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 9 அடுக்கு மாடிகளை கொண்ட 135 அடி உயரமுள்ள கட்டிடம் கட்டப்பட உள்ளது. 33 கி.வாட் மின் இணைப்பு கேட்டுள்ளோம். 1.6 மில்லியன் தண்ணீர் சேவைக்கு விண்ணப்பித்துள்ளோம். மொத்தம் 28 மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய முனையத்தை வரும் 2024 ஜனவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின் மார்ச் வரை கமிஷன் ஆய்வு நடத்தப்படும். பின்னர் பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுவரை 93 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை மொத்தம் ரூ.880 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தர திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

*300மீ தூரம், 6மீ ஆழத்தில் திறந்தவௌி கீழ்தள பாலம்
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் விமான ஓடுதளத்தின் ஒரு பகுதி திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. விமானம் தரையிறங்கும்போது கொஞ்சம் தாழ்வாக இறங்குவதால் பாதுகாப்பு கருதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 300 மீ தூரத்திற்கு 6 மீ ஆழத்தில் திறந்தவௌி கீழ்தள பாலம் அமைப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. எனவே எல்லா நிலைகளிலும் விமான நிலையங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த முயற்சி செய்து வருகிறோம்.

புதிய முனையமும் தகுந்த பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தின் பணியில் பொறியாளர்கள், தொழிலாளர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திட்டமிட்ட நாட்களுக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக பணிகள் நடைபெற்று வருகிறது.

* 40 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் வடிவமைப்பு
தற்போது செயல்பாட்டில் உள்ள விமான நிலையம் ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளை மட்டுமே கையாளும் திறன் உடையது. ஆனால் புதிய முனையம் 2027-28க்குள் 40 லட்சம் பயணிகளை கையாளும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்த பின் பழைய முனையம் முழுமையாக 250 மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் இண்டர்நேஷனல் கார்கோ டெர்மினலாக மாற்றப்பட உள்ளது.

* மேற்கூரை விபத்தை தவிர்க்க புதிய முறை
புதிய முனையத்தில் கட்டப்பட்டுள்ள மேற்கூரைகள் அனைத்தும் மெட்டல் போர்டு மேற்கூரையாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி மேற்கூரை விழுந்ததற்கு காரணம் ஸ்பைடர் கிளான்சிங் முறையில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்த முறையை கையாளாமல் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்து இணைக்கும் முறை கையாளப்பட்டுள்ளது. கூரையில் இருந்து எதுவும் விழாது.

* ஆண்டுக்கு 6409 மெ.டன் பொருட்கள் ஏற்றுமதி
உள்நாட்டில் உற்பத்தியாகும் அனைத்து பொருட்களும் வௌிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் அந்நிய செலாவணி அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் உயரும். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட், தோஹா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு தினம் மற்றும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, வாரம் ஒருமுறை என்ற விகிதத்தில் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தினமும் 18 மெட்ரிக் டன் பொருட்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

மாதத்திற்கு 550 மெட்ரிக் டன்னும், ஆண்டுக்கு 6,409 மெட்ரிக் டன் சரக்குகளும் கையாளப்படுகிறது. இதில் 98 சதவீதம் காய்கறிகள், பழங்கள், பூக்கள், கீரை வகைகள், பால் பொருட்கள், மீன்கள் கொண்டு செல்லப்படுகிறது. மீதி 2 சதவீதம் துணி வகைகள், வீட்டு உபயோக பொருட்கள், பரிசு பொருட்கள் மற்றும் புத்தகங்கள் கொண்டு செல்லப்படுகிறது. திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரும் பொருட்கள் 48 மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட நாட்டிற்கு அனுப்பி வைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் திருச்சி விமான நிலைய அதிகாரிகளால் எடுக்கப்பட்டு வருகிறது.

The post ரூ.1200 கோடியில் அதிநவீன வசதியுடன் திருச்சி விமான நிலைய புதிய முனையம்: l 93 சதவீத பணிகள் நிறைவு l 2024 ஜனவரியில் திறக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Trichy airport ,World War II ,British Government ,Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சியில் இருந்து வெளிநாடு செல்ல...